யாமறிந்த சுஜாதா

Science Fiction-உம் நானும் அறிமுகமானபோது நான் எட்டாம் வகுப்பில் இருந்தேன் (இல்லை ஏழாவதோ?). என் சித்தி தயவில் பைண்டு புத்தகங்களாய் உருவெடுத்திருந்த பல ஆனந்த விகடன்/குமுதம் தொடர்கதைகளில் ஒன்றுதான் நான் படித்த முதல் விஞ்ஞானக் கதை: மீண்டும் ஜீனோ. எதிர்கால சமுதாய-அரசியல் அலசல்களை (sociopolitical:)) விட அதில் அப்பொது என்னைக் கவர்ந்தது வருங்கால உலகின் வருணனைகளும், ரோபோ நாய்க்குட்டிகளும், ' நிலா' போன்ற அழகான தமிழ்ப்பெயர்களும், சற்றே சிந்திக்க வைக்கும் எழுத்து நடையும் தான். நான் படித்த முதல் சுஜாதாவும் அதுவே. அதன்பின் அப்போது படித்த சுஜாதா கதைகள் எவையும் ஏனோ அவ்வளவாய் பிடிக்கவில்லை, நினைவிலுமில்லை (, என் இனிய இயந்திரா, ...).


ஞாபகம் இருப்பது அவரது non-fiction. ஜூனியர் விகடனில் அவர் எழுதிய தலைமைச் செயலகம்-உம் புத்தகமாய் வெளியான சிலிக்கன் சில்லுப்புரட்சி-யும் படித்துப் பிடித்து ஆனால் முழுமையாய்ப் புரியாமல், ஒரு கம்ப்யூட்டரின் கதை மிகவும் பிடித்து குத்துமதிப்பாகப் புரியவும் செய்தது எனது கணினியியல் ஈர்ப்பிற்கு ஒரு முக்கிய காரணம்.

கல்லூரியில் நான் படித்த கொஞ்சம் தமிழில் நிறைய சுஜாதா இருந்தார். கணெஷ்-வஸந்த் நாவல்கள் எனக்கு அறிமுகமானது அப்போதுதான் (எதையும் ஒருமுறை, மூன்று நிமிஷம் கணேஷ், ...). துப்பறியும் கதைகளுள் இத்தனை ஜனரஞ்சகமாக காமெடியும் துப்பறிவும் சரிவரக் கலந்த நாவல்களை நான் இன்றுவரை பார்த்ததில்லை (ஒரே விதிவிலக்கு: போன மாதம் படித்த Terry Pratchett- இன் Fifth Elephant - குத்துமதிப்பாக இப்படிப்பட்டதென்று சொல்லலாம்). (ஏதொ விவேக்குக்காகவே எழுதின மாதிரி இல்ல வசந்த் பாத்திரம்? யாரவது படம் எடுங்கப்பா.)

பின்னர் சுபாஷ் சிபாரிசில் நான் வாங்கிய விஞ்ஞானக் கதைகள் தொகுப்பில் பல கதைகளின் முடிவுகள் 'அட' போட வைத்தன. ஆவற்றுள் சில, சிறுகதை எனும் வடிவத்தையே சோதித்துப் பார்ப்பவை. மன்னிக்கவும், இது கதையின் ஆரம்பமல்ல-வில் recursion தெரிகிறது. ஒரு கதையில் இரண்டு கதைகள்-இல் சம்பந்தமில்லாத இரு கதைகளிலிருந்து கதை மாந்தர்கள் சந்தித்துக்கொள்ளும் arbit வினோதம் தெரிகிறது. நச்சுப்பொய்கை மஹாபாரதத்தின் ஒரு anachronistic உபகதை - வனவாசத்தின்போது பாண்டவர்கள் ஒரு ஏரியை தண்ணீர் குடிக்க அணுக அந்த ஏரி அவர்களை எச்சரிக்க அது கேளாமல் அவர்கள் நீர் அருந்த, உடனே மயங்கி விழுகிறார்கள். எஞ்சியிருப்பது யுதிஷ்டிரர் மட்டுமே. அவர் தன் தாகத்தை தாங்கிக்கொண்டு ஏரி கேட்கும் 'பொது அறிவுக்' கேள்விகளுக்கு ("மனிதனுக்கு எப்போதும் துணை எது?", "புல்லினும் அற்பமானது?") பொறுமையாய் பதில் சொல்லி தன் தம்பிகளுக்கு உயிர்ப்பிச்சை வாஙிக்கொண்டு இந்த டயலாக் விடுகிறார்:
".. சுனையருகில் மிக லேசாக கார்பன் மானாக்ஸைடு இருக்கிறது. மேலும் சுனைத் தண்ணீரில் லெசாக தயோ மெண்டோன் கலந்திருக்கிறது. இவை மிகக் குறைவில் கலந்திருப்பதால் உயிருக்கு ஆபத்து இல்லை. கரைக்கு வந்து நல்ல காற்றை சுவாசித்தால் போதுமானது. தேவையென்றால் டெக்ஸ்ட்ரோஸ் அதிகப்படியாக உள்ள சில பழங்களைக் கொடுத்தால் குணமாகிவிடுவார்கள். மரத்தில் ஒளிந்துகொண்டு வெவ்வேறு திசைகளில் குரல் கொடுக்கப் பழகிய அசரீரியே, உன் கேள்விகள் சுவாரஸ்யமாக இருந்தன, நன்றி."
விஞ்ஞானம் வசந்த் இரண்டுமே இல்லாத அவர் கதைகளை நான் அதிகம் படித்ததில்லை (எப்போதும் பெண், உள்ளம் துறந்தவன்). அவரது அறிவியல் கதைகளைக் காட்டிலும் எனை வியப்பிலாழ்த்திய நாவல் எப்போதும் பெண். பெண்கள் சிந்திக்கும், நடக்கும், தன்னடங்கும் விதத்தை எனக்கு சற்றே demystify செய்த புத்தகம் அது.

ஆனந்த விகடனின் கற்றதும் பெற்றதும் பகுதியில் அவர், தமிழ் (வெண்பா, ஹைக்கூ), புவியியல் (quantum தத்துவம், ஸ்டீபென் ஹாக்கிங்), கணினியியல் (NP-hard வினாக்கள்), சினிமா (சிவாஜி, மருதநாயகம்) எல்லாவற்றையும் ஒரெ மூச்சில் சரளமாய் விவாதிக்கும் விதம் வியக்கத்தக்கது. பல சினிமாக்களில் அழகான சிறு நறுக் வசனங்களில் சுஜாதா தெரிவார். திரைக்கதை எழுதுவது எப்படி? மூலம் எனக்கு சினிமா இலக்கியத்தையும் சற்று விளங்க வைத்தவர்.

சுஜாதாவை நாம் இழந்ததில் தமிழ் சினிமாவின், ஆனந்த விகடனின், குமுதத்தின் தரம் சற்றே குறையத்தான் போகிறது. வாசகர்களுக்கு அதுவரை கண்டிராத எழுத்து நடைகளைத் தந்த, வாசகர்களுக்கும் கொஞ்சம் சிந்திக்க வாய்ப்பளித்த, வாசகர்களைத் தன்னிடம் வாதிக்க அனுமதித்த ஒரு எழுத்தாளாரை இனி நாம் எப்போது காண்பது?

5 comments:

  1. Is is only posted by you or written by you also?

    ReplyDelete
  2. Anon, anything you see posted here is written by me. Unless explicitly mentioned as a quote. :)

    ReplyDelete
  3. Bravo! Brilliant!GREAT!

    ReplyDelete
  4. :D Glad to have made an impression. மிக்க நன்றி.

    ReplyDelete
  5. Merkur Futur Safety Razor Matte Chrome - Singapore Casino
    Merkur Futur Safety Razor Matte Chrome. Open with free shipping ラッキーニッキー and returns, this Merkur Futur razor is 제왕카지노 made in the same factory.The chrome plated version of the razor 메리트카지노 is very easy to

    ReplyDelete